மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றில் திருடப்பட்ட 24½ பவுண் தங்க நகைகளை 24 மணி நேரத்திற்குள் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
துறைநீலாவணையில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24½ பவுண் தங்க நகைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) திருடப்பட்டிருந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதே நாளில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டைப் பெற்றவுடன் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் பலனாக, 24 மணி நேரத்திற்குள் களவாடப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளில், கைது செய்யப்பட்ட யுவதி வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், பாதிக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட யுவதியும், மீட்கப்பட்ட தங்க நகைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதீப் களுபாலவின் வழிகாட்டுதலிலும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் பணிப்புரையிலும் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். யூட் றொமேஸின் நேரடி கண்காணிப்பில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி. ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம் வழக்கு 24 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டு, திருடப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
