அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளராக பணியாற்றிய நபருக்கு, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்த வழக்கில், முறைப்பாட்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலைக்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர் எப்பாவல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.டி. தேவாநந்த என்பவராவார். இவர் அரச வைத்தியசாலை ஒன்றில் சுகாதார உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய காலப்பகுதியில், எப்பாவல 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த பெலிகல பி. மகிந்த குமார என்பவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், முறைப்பாட்டாளர் தரப்பில் அரசு சட்டத்தரணி யோமாலி நாகொட விதான ஆஜரானார். பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா முன்னிலையாகியிருந்தார்.
Source: https://samugammedia.com/case-of-strangulation-murder-death-penalty-for-health-worker-1784728670
