ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ‘ஹட்டன் லீக் மேயர் கிண்ண’ கால்பந்து தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று (11) யங் மேட்ஸ் எஃப்சி மற்றும் நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, போட்டியின் முடிவுற ஏழு நிமிடங்கள் இருந்தபோது இந்த மோதல் ஆரம்பமாகியுள்ளது. அந்த நேரத்தில் யங் மேட்ஸ் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
திடலில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சில பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் மோதல் கைகலப்பாக மாறியது.
ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலவும் சூழ்நிலை காரணமாக போட்டியின் எஞ்சிய ஏழு நிமிடங்களை வேறொரு மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு நோர்வூட் சன்ரைஸ் எஃப்சி அணி போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
