வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் சொந்தமாக வீடொன்றை அமைத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் வீடற்ற மக்களுக்கான காசோலை வழங்கும் விசேட நிகழ்வொன்று இன்று (09) காலை 9.00 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளரும், கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு இணைப்பாளருமான எம். ஈ. எம். ராபிக் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையின் கீழ், தெரிவு செய்யப்பட்ட 28 குடும்பங்களுள் இரண்டாம் கட்டமாக 10 குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுக்கான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
