சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலய சுற்றாடல் படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலமும் மர நடுகை நிகழ்வும் இன்று (05) மிகச் சிறப்பாக இடம்பெற்றன.
‘இயற்கைக்கு ஒரு மடல்’எனும் தொனிப்பொருளில், பாடசாலை அதிபர் எஸ்.ரீ. நஜீம் தலைமையில் இந்நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இதில் சிறப்பு அதிதியாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மர நடுகை என்பவற்றில் பங்கெடுத்தார்.
இன்றைய தினத்தின் ஆரம்ப நிகழ்வாக சுற்றாடல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது, தற்கால சூழலில் சுற்றாடல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அதிபர் எஸ்டி. நசீம் விசேட உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு, மாணவிகளால் விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. பாடசாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், பிரதான வீதி வழியாக கிண்ணியா ஒரிகன் பாலத்தின் கடற்கரை பகுதியை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவிகள், சுற்றாடல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டினர்.
கடற்கரை பகுதியைச் சென்றடைந்ததும், அதிதிகள் மற்றும் மாணவர்களினால் அங்கு மரக்கன்றுகள் நட்டி வைக்கப்பட்டன.
மர நடுகையைத் தொடர்ந்து மாணவிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மீண்டும் பாடசாலைக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சுற்றாடல் தின நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
