கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக யுனிசெஃப் உடனான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் யுனிசெஃப் இலங்கை பிரதிநிதி செல்வி எம்மா பிரிகாம் ஆகியோருக்கிடையில் நேற்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் யுனிசெஃப் பல தசாப்தங்களாக ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் யுனிசெஃப் பேணிவரும் ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தில் அந்தப் பணிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது முக்கியமாக, திருகோணமலையில் இயங்கி வரும் யுனிசெஃப் அலுவலகம் எதிர்வரும் 2026 டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பின்னர் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவு யுனிசெஃபின் உலகளாவிய மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் புதிய உத்திசார் திட்டத்திற்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், திருகோணமலை அலுவலகம் மூடப்படுவது கிழக்கு மாகாணத்திற்கான யுனிசெஃபின் அர்ப்பணிப்பு முடிவடைவதை குறிக்காது என வலியுறுத்தப்பட்டது.
மாறாக, கிழக்கு மாகாணத்துடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து பேணுவதுடன், இங்குள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தேவையான நேரத்தில் பதிலளிக்கக்கூடிய நெகிழ்வான மற்றும் திறமையான செயல்பாட்டு அமைப்பை தொடர்ந்து பேணுவதற்கு யுனிசெஃப் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேசிய மட்டத்தில் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் யுனிசெஃபின் எதிர்கால பணிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தின் பிராந்திய தேவைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, எதிர்காலத்தில் ஆளுநர் அலுவலகம் மற்றும் தொடர்புடைய மாகாண நிறுவனங்களுடன் நெருக்கமானதும் ஆக்கப்பூர்வமானதுமான உறவை தொடர்ந்து பேணுவதற்கும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் உரிமைகள் தொடர்பாக அடையாளம் காணப்படும் முன்னுரிமைப் பகுதிகளில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பு, கிழக்கு மாகாணத்தின் குழந்தைகள் மற்றும் சமூகங்களுக்காக யுனிசெஃப் மற்றும் மாகாண அரசாங்கத்துக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவான மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையை புதிய வழிகளில் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கியமான படியாக அமைந்துள்ளது.
