Home இலங்கை குருக்கள்மடம் மனிதப் புதைகுழி; மண் மாதிரி பரிசோதனைக்கு உத்தரவு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி; மண் மாதிரி பரிசோதனைக்கு உத்தரவு

0
image

குருக்கள்மடம் பகுதியில் சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான பகுதியில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்த பின்னர் கல்முனை ஊடாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவிக்கையில், 

 

கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரான காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்டோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்கு நேற்று மீண்டும் அழைக்கப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் பிரதேச சபை வழங்கத் தயாராக இருப்பதாக தவிசாளர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 14.09.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வழக்கின் பிரத்தியட்ச முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதனைத் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/the-gurus-hermitage-is-a-human-womb-an-order-for-testing-like-soil-1788942202

NO COMMENTS

Exit mobile version