யாழ்ப்பாணம் – புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு அண்மையில் மீள்கட்டமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை நிறுவுவது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் சிவகுமார், குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் தீவகத்தின் அடையாளமாக நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை நிறுவ வேண்டும் எனும் முன்மொழிவை சபையில் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் தீவகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருப்பதால், அந்தச் சிலை அங்கு நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
எனினும், தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் இதற்கு மாற்றுக் கருத்தை முன்வைத்தனர். நயினாதீவு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இருப்பதுடன், அங்கு பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருவதால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்தை மட்டும் காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது என அவர்கள் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலாக, நான்கு மதங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் அடையாளம் அல்லது தீவகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுவான சின்னம் ஒன்றை நிறுவுவது சிறந்தது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியில், பெரும்பான்மை உறுப்பினர்கள் நாகபூசணி அம்மனின் சிலையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆதரித்ததையடுத்து, அதற்கான தீர்மானம் வேலணை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் அடிப்படையில் சிலை நிறுவும் பணிகளுக்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
