அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக ஜேத்தவனாராமயவிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே குறித்த நபர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர், அரச வைத்தியசாலைக்குச் செல்லாமல் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு அவருக்கு இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டதுடன், உட்கொள்ளும் மருந்துகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சையின் பின்னர் அவர் வீடு திரும்பிய நிலையில், இன்று அதிகாலை வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
இதன்போது, வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகில் அவர் தரையில் விழுந்து கிடப்பதை குடும்பத்தினர் கண்டுள்ளனர். அச்சமயத்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
