Home இலங்கை கேப்பாபிலவு பூர்வீக மக்கள் ஆளுநரிடம் அவசர கோரிக்கை; இடம்பெறவுள்ள போராட்டம்

கேப்பாபிலவு பூர்வீக மக்கள் ஆளுநரிடம் அவசர கோரிக்கை; இடம்பெறவுள்ள போராட்டம்

0
image

கேப்பாபுலவு பூர்வீக மக்கள் தங்களின் வாழ்விட உரிமை தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக தங்களின் பூர்வீக வாழ்விட உரிமையை நீதியான மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கோரி வருவதாகவும், அதற்கு மாறாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அநீதியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி 04.06.2026 அன்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசித்து பதில் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அதன்படி 14.06.2026 அன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அன்றைய முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இருந்தவர் தற்போதைய வட மாகாண ஆளுநராகவும் இருக்கின்றார். மக்களின் உண்மை நிலை, நலன்புரி நிலையங்களிலிருந்து அவர்கள் குடியமர்த்தப்பட்ட சூழ்நிலை மற்றும் மாற்றுக்காணி, பதில்காணி, வீடு தொடர்பான எந்தவொரு ஒப்பந்தத்திலும் மக்கள் கையெழுத்திடவில்லை என்பதையும் நன்கு அறிந்திருப்பதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நாளையதினம் (24.06.2026)   மனவெழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் , வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதோடு, வாழ்விடப் பிரச்சினைக்கு உடனடியான சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்பாபுலவு பூர்வீக மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்றையதினம் (23) மாலை ஊடகங்களுக்கு கேப்பாபிலவு மக்கள் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த 16 ஆண்டுகளாக தங்களின் பூர்வீக வாழ்விட உரிமையை நீதியான மற்றும் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கோரி வருவதாகவும், அதற்கு மாறாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் அநீதியானவை அதனையிட்டு நாளையதினம் 24 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களாகிய நாம் கவனயீர்ப்பு சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

அகதி முகாமில் இருந்து கொண்டுவந்து  மாதிரி கிராமத்தில்  விட்டிருக்கின்றார்கள். எங்கள் பூர்வீக காணிகளுக்கு இதுவரை போகவில்லை. பிள்ளைகளுக்கு கொடுக்க, தோட்டம் செய்ய கூட காணி இல்லை எனவே எங்கள் நிலையை கருத்தில் கொண்டு காணியை மீட்டுதரவேண்டும்  என கூறியிருந்தனர்.

Source: https://samugammedia.com/kappabilavu-indigenous-people-make-urgent-appeal-to-the-governor-upcoming-protest-1782225982

NO COMMENTS

Exit mobile version