Home இலங்கை சகோதரிகளின் உயிரை பறித்த மாம்பழம்? அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பம்

சகோதரிகளின் உயிரை பறித்த மாம்பழம்? அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பம்

0
image

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்டதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவுக்கு உள்ளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த வைஜிநாத் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் ஹைதராபாத்தில் வசித்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவர்களது உறவினரான ரேணுகா, நாராயணகுடா பகுதியில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே வாங்கிய மாம்பழங்களை குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார். 

அந்த மாம்பழங்களை இந்துமதி மற்றும் அவரது நான்கு மகள்களும் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அனைவருக்கும் திடீரென வயிற்றுவலி மற்றும் வாந்திப்போக்கு ஏற்பட்டதால், கச்சிகுடாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்றாவது மகளான 17 வயதுடைய புவனேஸ்வரி கடந்த 08 ஆம் திகதி உயிரிழந்தார். தொடர்ந்து, இளைய மகளான 10 வயதுடைய சந்தியாவும் கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், இந்துமதி மற்றும் மற்ற இரண்டு மகள்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளின் மரணம் தொடர்பில் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாராயணகுடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாம்பழங்களே மரணத்திற்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/a-mango-that-took-the-lives-of-sisters-family-plunged-into-shock-1781188677

NO COMMENTS

Exit mobile version