அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணி (Civil Intelligence Front) குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த டெண்டர் கோரலின் போது மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த தகுதியான நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்காது, விதிகளுக்குப் புறம்பான முறையில் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கு அது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 08, 2026 அன்று கோரப்பட்ட இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்திருந்தன. அதில் ஒரு கிலோகிராம் கழிவை அகற்றுவதற்கு முறையே 179 ரூபா, 230 ரூபா மற்றும் 260 ரூபா என விலைகள் கோரப்பட்டிருந்தன. விதிகளின்படி, ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்திற்கே இந்த டெண்டர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில நாட்களிலேயே அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா கோரியிருந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிக விலைக்கு இந்த டெண்டரைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என சிவில் புலனாய்வு முன்னணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
‘சமல் ராஜபக்ஷ வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்’ (Chamal Rajapaksa Waste Facility Management) என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், தற்போது அதன் பெயரை ‘ஜி.எஃப்.சி’ (GFC) என மாற்றியுள்ளதாக போதிய ஆதாரங்களுடன் சிவில் புலனாய்வு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்த விலை சமர்ப்பிப்பை நிராகரித்து, அதிக விலை கொண்ட இந்த நிறுவனத்தைத் தெரிவு செய்தமையினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கு கணக்கிடும் போது அரசாங்கத்திற்கு 3 கோடியே 31 இலட்சத்திற்கும் அதிக நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது என்பது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விடயமாக இருக்கும் நிலையில், டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட லாபங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தகுதியான நிறுவனங்களை ஓரங்கட்டியுள்ளனர்.
இந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து சிவில் புலனாய்வு முன்னணியினர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்களுடன் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை அளித்துள்ளனர்.
அமைச்சர் மட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இது அப்பட்டமான பொதுப்பண ஊழல் என்பதால், இதுகுறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் உடனடியாகத் தலையிட்டு இந்த டெண்டரை ரத்து செய்து, அரசுக்கு ஏற்படவிருக்கும் இந்த கோடிக்கணக்கான நஷ்டத்தைத் தடுக்க வேண்டும் எனவும், இது குறித்து ஜனாதிபதிக்கும் விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவில் புலனாய்வு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
