Home இலங்கை சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைக்கப்படும்! அமைச்சர் நளிந்த

சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைக்கப்படும்! அமைச்சர் நளிந்த

0
image

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதால், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், உலக சந்தையின் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

“அமெரிக்கா – ஈரான் இடையிலான உடன்படிக்கை வரும் வெள்ளிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் உலகப் பொருளாதார நிலைமை சாதகமாக மாறும் போது, அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஜூன் மாதத்துடன் முதற்கட்ட எரிபொருள் மானியக் காலம் முடிவடைகிறது. தற்போது மாதத்தின் நடுப்பகுதி என்பதால் உலகச் சந்தை மாற்றங்களை அவசரப்படாமல் உற்றுநோக்க வேண்டியுள்ளது. உலகச் சந்தையின் சாதகமான மாற்றங்களை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.”

நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றி சீராக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணங்களை வழங்குவது அவசியமாகும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/fuel-prices-will-be-reduced-at-the-first-possible-opportunity-minister-nalind-1781660540

NO COMMENTS

Exit mobile version