Home இலங்கை சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு

0
image

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்க ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்படுவது முதல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் வரையிலான பொலிஸ் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, போதைப்பொருள் வழக்குகளில் ஏற்படும் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை தாமதங்கள், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் ஆகியவற்றால் விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதுடன் மட்டுப்படாமல், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், தொலைபேசி நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பொருத்தமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் காலத்தின் தேவைக்கேற்ப நடைமுறையில் உள்ள சட்டங்களைத் திருத்துதல் ஆகியவற்றின் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், குற்றவியல் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்குள் நவீன தடயவியல் ஆய்வகமொன்றை நிறுவுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

 

Source: https://samugammedia.com/study-on-new-measures-to-reduce-prison-overcrowding-1787638783

NO COMMENTS

Exit mobile version