Home இலங்கை சீனர்களுக்குள் மோதல்; துறைமுக நகரில் கடத்தப்பட்டவர் காட்டில் சடலமாக மீட்பு

சீனர்களுக்குள் மோதல்; துறைமுக நகரில் கடத்தப்பட்டவர் காட்டில் சடலமாக மீட்பு

0
image

கொழும்பு துறைமுக நகரில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம் எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை, கொழும்பு துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக கெப் வாகனம் ஒன்றில் மூன்று சீனப் பிரஜைகள் சென்றிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். 

அப்போது இரண்டு வாகனங்களில் வந்த மற்றொரு சீனப் பிரஜைகள் குழு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாக்குதலின் போது ஒருவரைக் கடத்திச் சென்றதுடன், அவர்கள் வந்த வேன் ஒன்றை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த வேனிலிருந்து வாயு துப்பாக்கி ஒன்றும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கரந்தனை – கேட்டுக்கடைப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த எஹலியகொடை பொலிஸ் குழுவினர் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கல் குவியலைக் கண்டுள்ளனர். 

அதனைச் சோதனை செய்தபோது மனிதக் கையின் ஒரு பகுதி காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதலில், கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

அந்த சடலம் சீனப் பிரஜை ஒருவருடையது என ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணப்பட்டதுடன், பின்னர் அது கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அதே நபருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை எடுத்துச் செல்ல சந்தேகநபர்கள் அதனை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு சீனப் பிரஜைகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கரையோரப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சீனப் பிரஜைகளுக்கிடையிலான இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சீனத் தூதரகம் கவலை வெளியிட்டுள்ளதுடன், உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக விரிவான மற்றும் உடனடி விசாரணை நடத்துமாறும், இலங்கையில் உள்ள சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் இலங்கைப் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Source: https://samugammedia.com/clash-among-chinese-kidnapped-person-found-dead-in-forest-near-port-city-1784819425

NO COMMENTS

Exit mobile version