நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், கடற்படை அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதற்காக 171 கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (21) தெற்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 14 அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தெற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் தவலம பகுதியில் இரண்டு குழுக்களும், ஹினிதும பகுதியில் ஒரு குழுவும், மாபலமக பகுதியில் ஒரு குழுவும், நாகொட பகுதியில் ஒரு குழுவும் என ஐந்து அனர்த்த நிவாரணக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு குழுக்களும், யட்டியாந்தோட்டை பகுதியில் இரண்டு குழுக்களும், சீதாவக்க பகுதியில் இரண்டு குழுக்களும், இரத்தினபுரி பகுதியில் மூன்று குழுக்களும் என ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவை ஏற்படும் பட்சத்தில் குறித்த குழுக்களை உடனடியாக அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Source: https://samugammedia.com/the-navy-team-is-ready-1789972917
