Home இலங்கை சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையைத் தாக்கும்! 38 லட்சம் மக்கள் ஆபத்தில்?

சுனாமி ஏற்பட்டால் 40 நிமிடங்களில் அலைகள் இலங்கையைத் தாக்கும்! 38 லட்சம் மக்கள் ஆபத்தில்?

0
image

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை பெரும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் அபாயமுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட எச்சரித்துள்ளார்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) முன்னிலையான போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் நாட்டின் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பிலுள்ள பாரிய குறைபாடுகளையும், ஆபத்துகளையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

நாடு எதிர்கொள்ளும் மிகக் கடுமையான ஆபத்து ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், 

“அந்தமான் தீவுப் பகுதியில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி உருவானால், வெறும் 40 நிமிடங்களுக்குள் சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரங்களை வந்தடையும். இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள் கரையோரப் பகுதிகளில் வாழும் 3.8 மில்லியன் (38 லட்சம்) மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினமான காரியம்” எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

அத்துடன், தற்போது நாட்டில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்வதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இயலாமைகள் குறித்து அவர் மேலும் விளக்குகையில்

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி போன்ற அனர்த்தங்களின் போது, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான பணியாளர் திறன் தமது நிறுவனத்திடம் இல்லை. 24 மணிநேரமும் இயங்கும் அவசர கால நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்கு இரவு நேரப் பணிக்கான அடிப்படை தங்குமிட வசதிகள் கூட இல்லை.

மாவட்ட ரீதியான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மாலை 4.30 மணிக்கே மூடப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது, தொலைதூரத்திலுள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அதிக நேரம் வீணாகிறது.

பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையும் (DMC) தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தையும் (NDRSC) இணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், அந்தச் செயல்முறைக்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் நாடு கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும்.

உலக நாடுகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தையும் வளங்களையும் பயன்படுத்தி தங்களது அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் வேளையில், இலங்கையில் இந்தச் செயல்முறை மிகவும் மெதுவாகவே முன்னேறி வருவதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட கவலை வெளியிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/if-a-tsunami-occurs-waves-will-hit-sri-lanka-in-40-minutes-38-million-people-are-at-risk-1783834557

NO COMMENTS

Exit mobile version