Home இலங்கை சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் ஜனாதிபதிக்கு தாயார் கடிதம்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் ஜனாதிபதிக்கு தாயார் கடிதம்

0
image

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தனது மகன் 37 வருடங்களாக இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி, நாட்டுக்காக தனது இளமைக் காலத்தையும் குடும்பத்துடன் கழிக்கக்கூடிய பெறுமதியான வருடங்களையும் தியாகம் செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

வயதான தாயாக தனது மகன் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருப்பதைக் காண்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், எந்தவொரு விசாரணையையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும், குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை பரிசீலித்து, சாட்சிகள் இருப்பின் அவற்றை விசாரித்து உண்மையைக் கண்டறியுமாறும் அவர் கோரியுள்ளார். 

விசாரணைகள் நடைபெறும் அதேவேளை, தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் என ஒரு தாயாக கருணையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து விசாரணைகளும் சாட்சிகளின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் எனவும், தடுப்புக் காவலானது சாட்சிகளுக்கு மாற்றீடாக அமையக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், தனக்கு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தான் விசேட சலுகைகளை எதிர்பார்க்கவில்லை எனவும் நீதி,மனிதநேயம் மற்றும் நியாயமான ஒரு சந்தர்ப்பத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இறுதியாக, தனது மகன் சுதந்திரமாக சட்டத்தின் முன் முகம்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://samugammedia.com/do-not-extend-suresh-sallays-detention-mothers-letter-to-the-president-1787548883

NO COMMENTS

Exit mobile version