மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்றைய தினம் (22) கொழும்பு 3, மலர் வீதியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னபெரும மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் தற்போது அரங்கேறி வரும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக நாட்டின் ஜனநாயகம் முழுமையாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், ‘ஜி.எஸ்.பி பிளஸ்’ (GSP+) வரிச்சலுகையை நாடு இழக்கும் பாரிய பொருளாதார அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தாம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார். நாட்டின் மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதாரச் சுமையைக் கருத்திற்கொண்டு, எரிபொருளுக்கான மானியங்களைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என அங்கு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு முடிந்து தாம் வெளியேறிய போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர், அரசியல் கட்சித் தலைவரான சுகீஸ்வர பண்டார, ஏதோ பாதாள உலகக் குழுவினரை ஒடுக்கும் பாணியில், வீதியை மறித்து வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
அவருடன் வாகனத்தில் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பினோய் ஹெட்டியாராச்சியும் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி ஐந்து மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இதுவொரு குற்றவியல் குற்றம் என்பதால், இதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது ஒரு பொலிஸ் ராஜ்யத்தை நோக்கிய சர்வாதிகாரப் பயணமாகும் எனவும் அவர் சாடினார்.
அடுத்த வருட மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாடு தற்போது கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கூறினார். மே மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் டொலர் வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வித சுங்கவரியுமின்றி ஆடை, தேயிலை, மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் GSP+ சலுகையே இலங்கையின் பொருளாதாரத்திற்குத் தீர்வாக உள்ளதாக அவர் விவரித்தார்.
அடுத்த வருடம் GSP+ சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில், இதற்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாகும். தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு முரணானது என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில், தாம் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தற்போதைய நீதி அமைச்சர் கொண்டுவந்த புதிய சட்டமூலம், பழைய சட்டத்தை விடவும் மோசமானது என சிவில் அமைப்புகளாலும் சட்டத்தரணிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், அதனை நிறைவேற்ற முடியாது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டமூலத்தை அடுத்த இரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப் போவதாக நீதி அமைச்சர் கிளிநொச்சியில் வைத்து தெரிவித்துள்ள போதிலும், அதன் உள்ளடக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். சமூகத்துடன் முறையான கலந்துரையாடல் இன்றி தன்னிச்சையாக உருவாக்கப்படும் இத்தகைய சட்டங்களால் GSP+ சலுகை இல்லாது போகும் அபாயம் உள்ளதுடன், அவ்வாறு நடந்தால் இலங்கை பொருளாதாரத்தால் அந்தப் பாதிப்பைத் தாங்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசியலமைப்பின் படியும் சர்வதேச சட்டங்களின் படியும் சித்திரவதைகளுக்கு உள்ளாகாமல் வாழ்வது அனைவரதும் அடிப்படை உரிமையாகும் எனத் தெரிவித்த அவர், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கும் இந்த பாதுகாப்புப் பொருந்தும் என்றார். இலங்கையில் சித்திரவதைகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவொன்று தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளதை நினைவுபடுத்திய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இத்தகைய சர்வதேச விதிகளை இலங்கை மீறினால் அதன் விளைவுகள் மிக ஆபத்தானதாக அமையும் எனவும் தனது உரையில் எச்சரித்தார்.
