Home இலங்கை ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீட்டுக்காக குத்தகைக்கு விட அனுமதி

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீட்டுக்காக குத்தகைக்கு விட அனுமதி

0
image

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, தற்போதைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் அல்லது தனிப்பட்ட ஓய்வுக்காக பயன்படுத்தப்படாத ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாளிகைகள், அவற்றின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக கணிசமான அளவு அரச நிதி செலவிடப்படும் நிலையில் காணப்படுகின்றன.

முழுமையான வசதிகளுடன், உயர்ந்த கட்டடக்கலை மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்ட கவர்ச்சிகரமான நிலப்பரப்புகளில் அமைந்துள்ள இந்த மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெந்தோட்ட, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத் துறையில் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தகுதியான முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Source: https://samugammedia.com/permission-to-lease-presidential-palaces-for-tourism-investment-1785300390

NO COMMENTS

Exit mobile version