வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் மூலம், கடந்த ஜூன் மாதத்தில் நாடு 695 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.
இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவணுப்பல்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 23.2 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை பெற்றுள்ளது.
எனினும், 2025 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருவாய் 169.5 மில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாயிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
Source: https://samugammedia.com/low-foreign-exchange-inflows-in-june-1783739855
