இலங்கை மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக, டிஜிட்டல் வகுப்பறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் சீனா ஆதரவளித்துள்ளது. என இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று வியாழக்கிழமை(04.06.2026) பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திங்குட்பட்ட கிரான் புதிய கொலனி சிவ வித்தியாலயத்திற்கு சீனாவின் சகோதர பாசம் திட்டத்தின் கீழ் போட்டோ கொப்பி இயந்திரம் பாடசாலை மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் உதவி களையும் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் ந.துசியந்தன், போசகர் எஸ்.மாமாங்கராஜா, செயலாளர் த.வசந்தராஜா, உள்ளிட்ட கலரும் கலந்து கொண்டிருந்தனர்
சீனத் தூதரகத்தின் சார்பாக, இந்த நன்கொடை நிகழ்வைச் சாத்தியமாக்க உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் மாணவர்களுக்காகப் கற்றல் உபகரணங்கள், மற்றும் இப்பகுதி மக்களுக்கு 16 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உலர் உணவுப் பொருட்களையும், வழங்கி வைக்கின்றோம். குறிப்பாக, மாணவர்களின் வேண்டுகோளுக்கு உதவும் வகையில் இப்பாடசாலைக்கு ஒரு நகல் எடுக்கும் இயந்திரத்தை வழங்குகிறோம். இந்தப் பொருட்கள், சீன மக்களின் அன்பு, நட்பு மற்றும் நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறோன்.
சீனாவும் இலங்கையும் நல்ல நண்பர்கள். நாங்கள் சகோதரர்களைப் போலவே ஒருவருக்கொருவர் ஆதரவளித்து உதவுகிறோம். சீன மக்கள் எப்போதுமே இலங்கை மக்கள் மீது, குறிப்பாக இங்குள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள எங்கள் நண்பர்கள் மீது அக்கறை கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, நான் இந்த அழகான கிழக்கு மாகாணத்திற்குப் பலமுறை வருகை தந்துள்ளேன். இங்கு அற்புதமான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கின்றது. சில பயனுள்ள பொருட்களைக் கொண்டு வந்து, அனைவரின் வாழ்க்கையையும் சற்றே எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சீனாவில் “ஒரு தேசம் அதன் இளைஞர்கள் புத்திசாலியாக இருக்கும்போது மட்டுமே புத்திசாலியாக இருக்கும்; ஒரு தேசம் அதன் இளைஞர்கள் வலிமையாக இருக்கும்போது மட்டுமே வலிமையாக இருக்கும்” என்று கூறுவோம். அதனால்தான் சீனா எப்போதும் இலங்கையின் கல்வி மேம்பாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, சீன அரசாங்கம் நாடு தழுவிய அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைச் சீருடைத் துணிகளை வழங்கி, 44 இலெட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இலங்கை மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக, டிஜிட்டல் வகுப்பறை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் சீனா ஆதரவளித்துள்ளது.
சீனா மற்றும் இலங்கையின் எதிர்காலம் நெருக்கமாகப் பிணைந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். குழந்தைகள் நன்றாகக் கற்று, ஆரோக்கியமாக வளர்ந்து, தங்கள் கனவுகளை அடையும்போது, அவர்கள் நமது இரு நாடுகளுக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவுவார்கள்.
இலங்கையுடனான சீனாவின் நட்புறவுக் கொள்கையானது, அனைத்து இனக்குழுக்கள், மதங்கள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கி, அனைத்து இலங்கை மக்களையும் நோக்கியதாகும். இது கடந்த காலத்திலும் மாறவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை. ஒரு உண்மையான நண்பனாக, உங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் எங்களால் இயன்ற அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்.
உங்கள் அனைவருக்கும் படிப்பில் வெற்றியும், மகிழ்ச்சியான வளர்ச்சியும், ஒளிமயமான எதிர்காலமும் அமைய வாழ்த்துகிறேன் சீனாஇலங்கை நட்புறவு நீடூழி வாழ்க என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதனிடையே இந்நிகழ்வின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே சீன தூதுவராலயத்தினால் அவ்வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பினூடாக வழங்கப்பட்ட 240 இருக்கைகளைப் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலை நிருவானத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலையில் அமைந்துள் சில கட்டடங்கள் மிகவும் பழமைவாய்ந்துள்ளதாகவும், 6 மாடிகளைக் கொண்ட புதிய கட்டட வசதியை அமைத்துத் தருமாறு சீன தூதுவரிடத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.
