நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளின்போது, 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3,500 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் வருடாந்தம் வீதி போக்குவரத்து விபத்துக்களில் 2,500 முதல் 2,700 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் 1,000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தரமான பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
