தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு பரிசுப் பொதியாக அனுப்பப்பட்ட விமான சரக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 24ஆம் திகதி பாங்காக்கிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தின் மூலம் இந்த பரிசுப் பொதி அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசுப் பொருட்கள் அடங்கியதாகக் கூறப்பட்ட இந்த சரக்கு, பரிசோதனை மற்றும் விடுவிப்பிற்காக சுங்கக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலிதீன் பொதிகளில் இருந்து கஞ்சா மற்றும் ஹஷிஷ் உள்ளிட்ட மொத்தம் 10.608 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 106,080,000 ரூபாய்க்கும் (சுமார் 10 கோடி ரூபாய்) அதிகமாக இருக்கும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
