புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத்தை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று (17) விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர், நகர அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபை கட்டிடத்தை பார்வையிட்ட அவர், கட்டிடத்தின் தற்போதைய நிலை, தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதி அமைச்சர் ஆராய்ந்தார்.
இதன்போது, யாழ் தனியார் பேருந்து நிலையத்தையும் அவர் பார்வையிட்டதுடன், அதன் மேல் தளத்தில் அமைந்துள்ள கடைத்தொகுதிகள் இதுவரை குத்தகைக்கு விடப்படாமை மற்றும் அவற்றின் பராமரிப்பு தொடர்பிலும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், பண்ணைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா மற்றும் புல்லுக்குளம் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர், அப்பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
இந்த விஜயத்தில் யாழ் மாநகர சபை ஆணையாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் இணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
