Home இலங்கை நாட்டில் புதிய அரசியலமைப்பு நிச்சயம் கொண்டுவரப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

நாட்டில் புதிய அரசியலமைப்பு நிச்சயம் கொண்டுவரப்படும் – அமைச்சர் சந்தன அபேரத்ன

0
image

நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயமாக உருவாக்கப்பட்டு கொண்டுவரப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே குறித்த திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் எனத் தெரிவித்த அவர், 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைய அவசர தேவையை நிவர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தனித்து உருவாக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொதுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை முன்னெடுத்த பின்னரே அதனைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/a-new-constitution-will-definitely-be-introduced-in-the-country–minister-chandan-aberathna-1789634461

NO COMMENTS

Exit mobile version