Home இலங்கை தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மூதூர் வர்த்தகர்களுக்கு 2.17 கோடி நிதியுதவி வழங்கி வைப்பு!

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மூதூர் வர்த்தகர்களுக்கு 2.17 கோடி நிதியுதவி வழங்கி வைப்பு!

0
image

தித்வா புயல் அனர்த்தத்தினால் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தங்களது தொழில்களை ஆரம்பிப்பதற்கான நிதியுதவிகள் இன்று சனிக்கிழமை (13) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 381  பயனாளிகளுக்காக, மொத்தமாக 2 கோடியே 17 லட்சம் ரூபாய் (ரூபா 21,700,000) நிதி இவ்வாறு காசோலைகளாகக் கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிரனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளரும், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான  முகமது சப்ரான் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

தித்வா புயல் காரணமாக மூதூர் பகுதியில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களும், சுயதொழில் முயற்சியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், இந்தத் தொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுத் திட்டம் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்று மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். ரோஷனா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், கிளீன் சிறிலங்கா இணைப்பாளர், உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன உரையாற்றுகையில்

தித்வா புயல் காரணமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் எந்தவித உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறவில்லை.

தித்வா புயல் காரணமாக நாம் பெருமளவில் பாதிக்கப்பட்டோம் இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

தித்வா புயலுக்கு முதல் நாங்கள் எவ்வாறு நல்ல நிலையில் இருந்தோமோ அதே போன்று பின்னரும்  இருக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தினதும் எமது ஜனாதிபதியினதும்! நோக்கமாகும்.அதனால்தான் இவ்வாறான உதவிகளை செய்கின்றோம் என தெரிவித்தார்.

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகள் , கடை உரிமையாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் என்று சகல தரப்பினருக்கும் எம்மால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.எமது மக்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமெனவும் குறிப்பிட்டார்

Source: https://samugammedia.com/217-crores-in-financial-assistance-to-mudur-traders-affected-by-cyclone-titva-1781345150

NO COMMENTS

Exit mobile version