Home இலங்கை திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்து மான்செஸ்டரில் திரண்ட தமிழர்கள்

திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்து மான்செஸ்டரில் திரண்ட தமிழர்கள்

0
image

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் “12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12 இடங்கள்” என்ற அடிப்படையிலான அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு நேற்று மான்செஸ்டர் நகரில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்அருந்தாமல், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வில், “இலங்கை அரசின் இனவழிப்பு திட்டமும் தீவிரமமடையும் தமிழ் மக்களின் பாதுகாப்புப் பிரச்சினையும்” என்ற கருப்பொருள் முன்னிறுத்தப்பட்டது.

காலை 10 மணி முதல் பிற்பகல் வரை இடம்பெற்ற அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தாயக விடுதலைக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து அக வணக்கத்துடன் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் கோபாலன் பிரசாத் மலர்மாலை அணிவித்தார். உதயநிஷா ஈகைச் சுடரை ஏற்றியதையடுத்து, கலந்துகொண்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் தியாக தீபம் திலீபனின் தியாகம் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நினைவுப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

மேலும், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் வரலாறு மற்றும் உரிமைக் கோரிக்கைகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

 

இதேவேளை தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வின் 7ஆம் நாள் நிகழ்வு, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – கட்டைபறிச்சான் பகுதியில் இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது.

திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

Source: https://samugammedia.com/tamils-gathered-in-manchester-to-remember-thileepans-sacrifice-1789987349

NO COMMENTS

Exit mobile version