தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு – கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (17) மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனிக்கு பொதுமக்கள் மலர் தூவி தமது அஞ்சலியை செலுத்தினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாளை நினைவுகூரும் வகையில், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பவனி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகள் ஊடாகப் பயணித்து, பின்னர் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி வழியாக நல்லூரை சென்றடையவுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்துள்ள ஊர்திப் பவனி, எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி திலீபன் உயிர்த் தியாகம் செய்த நல்லூரை சென்றடையவுள்ளதாக செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
அன்றைய தினம் நல்லூரில் பிரமாண்டமான இறுதி வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
