Home இலங்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இருந்தால் சலேவிற்கு உயர்ந்த பதவி கிடைத்திருக்கும் – சாமர சம்பத்...

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இருந்தால் சலேவிற்கு உயர்ந்த பதவி கிடைத்திருக்கும் – சாமர சம்பத் குற்றச்சாட்டு

0
image

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் ஏறி அரசியல் பிரச்சாரம் செய்திருந்தால் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்திருப்பார் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ மீதும், கடந்த கால அரசாங்கங்கள் மீதும் போலியான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 75 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பும் சாபம் என்றே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

போலியான வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு ஏமாற்றமடைந்து மக்கள் ஆட்சிமாற்றத்தை  ஏற்படுத்தினார்கள். அதன் பயனை மக்கள் இன்று நன்கு அனுபவிக்கிறார்கள். அரசியல் ரீதியில் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

 

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டும் போது அரசாங்கத்தால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக கடந்தகால வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எதிர்வரும் 17 ஆம் திகதி எனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சகல சவால்களையும் நான் எதிர்கொள்வேன்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே  விவகாரம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் ஏறி அரசியல் பிரச்சாரம் செய்திருந்தால் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்திருப்பார்.

சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பக்கம் வந்தார்கள். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் பேராயர் கர்தினாலிடம் சென்றார்கள். அவரின் ஆலோசனையின் பின்னரே தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்தார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் பதவியில் இருந்தார்கள். அவர்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்று விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றார்.  

Source: https://samugammedia.com/if-he-had-supported-the-national-peoples-power-salev-would-have-gotten-a-higher-position–samar-sampaths-accusation-1781418417

NO COMMENTS

Exit mobile version