தேசிய மீலாத் வாரத்தை முன்னிட்டு, கிண்ணியா ரீ.பி. ஜாயா மகா வித்தியாலய மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.டி. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான மாணவிகளின் ஊர்வலம், கிண்ணியா பிரதான வீதி வழியாகச் சென்று கிண்ணியா கடற்கரைப் பூங்காவை சென்றடைந்தது.
தேசிய மீலாத் வாரத்தை முன்னிட்டு நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும், போதனைகளையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவிகள், நபிகளாரின் போதனைகள் மற்றும் சமூக நல்லிணக்கம், ஒழுக்கம், அன்பு, மரியாதை மற்றும் மனிதநேயம் தொடர்பான பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு சென்றனர்.
குறிப்பாக, “நல்வாழ்வு”, “பெரியோரை கண்ணியம் பண்ணுவோம்”, “சிறியோர் மீது அன்பு காட்டுவோம்”, “ஒழுக்கம் வாழ்வின் ஒரு அங்கம்” உள்ளிட்ட நபிகளாரின் போதனைகளை எடுத்துரைக்கும் வாசகங்கள் ஊர்வலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
மாணவிகளின் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இளம் தலைமுறையினரிடையே நல்லொழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயப் பண்புகளை வளர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்தது.
ஊர்வலம் கிண்ணியா கடற்கரைப் பூங்காவை சென்றடைந்ததைத் தொடர்ந்து, அங்கு விசேட மீலாத் நிகழ்வும் சொற்பொழிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் சலாம் விசேட மீலாத் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சிறந்த பண்புகள், மனிதநேயம், பெரியோரை மதித்தல், சிறியோர் மீது அன்பு செலுத்துதல், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புடன் செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன், அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை மேம்படுத்துவதும் அவசியமானது என வலியுறுத்தப்பட்டதுடன், நபிகளாரின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டு சமூகத்தில் பொறுப்புள்ள பிரஜைகளாக மாணவர்கள் உருவாக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தேசிய மீலாத் வாரத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாணவிகளுக்கு நபிகளாரின் போதனைகளை அறிந்துகொள்வதற்கும், அவற்றை தமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் வழிகாட்டும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
