பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பின்னரோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
இந்த நடைமுறை பேருந்துகள், வேன்கள், அலுவலகப் பயன்பாட்டு வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்ட பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்குப் பொருந்தும் என குறிப்பிட்டார்.
இது தற்போது நடைமுறையில் உள்ள வருடாந்திர வாகனத் தகுதிப் பரிசோதனைக்கு மாற்றாக அமையும் பரிசோதனை அல்ல எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மாறாக, வாகனங்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்தளவு விரிவானதும், குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடியதுமான சாலைத் தகுதிப் பரிசோதனையாக இது அமையும் என அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனைக்காக 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வாகனத்தின் பல்வேறு முக்கிய இயந்திர மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகள் பரிசோதிக்கப்படவுள்ளன.
எனினும், தனியார் வாகனங்கள் இந்தப் புதிய கட்டாயப் பரிசோதனை முறையில் உள்ளடக்கப்படமாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், தனியார் வாகனங்களும் இவ்வாறான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2025 மே மாதம் கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து, எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து மற்றும் அண்மையில் ஐந்து பேர் உயிரிழந்த மொனராகலை டிராக்டர் விபத்து உள்ளிட்ட தொடர்ச்சியான பாரிய விபத்துக்களின் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
