Home இலங்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: நாட்டில் நோயாளர்கள் 68,672 ஆக உயர்வு

தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: நாட்டில் நோயாளர்கள் 68,672 ஆக உயர்வு

0
image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 68,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி வரை 68,071 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஒரே நாளில் மேலும் 601 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பில் மேல் மாகாணமே தொடர்ந்து முதலிடத்தில் காணப்படுவதுடன், அங்கு மட்டும் 36,118 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,112 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 13,791 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் 12 நாட்களிலேயே 13,293 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் அதிகளவான பாதிப்புகள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அப்போது மட்டும் 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோய் காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பொதுமக்கள் டெங்கு பரவலைத் தடுக்க சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/dengue-cases-continue-to-rise-number-of-patients-in-the-country-increases-to-68672-1783938460

NO COMMENTS

Exit mobile version