வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து, நாட்டின் சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், தென், மத்திய, மற்றும் சபரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்று நோய்கள் பரவல் தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடமிருந்து சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அருகில் உள்ள சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/risk-of-spreading-infectious-diseases—urgent-notice-for-people-1785990767
