Home இலங்கை “நல்லபடம்” திரைப்படத்தின் இசை இருவட்டு வெளியீடு!

“நல்லபடம்” திரைப்படத்தின் இசை இருவட்டு வெளியீடு!

0
image

போதைக்கு எதிரான சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை இருவட்டு, கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் திரைப்படத்தின் பாடல்களை ரசித்ததுடன், சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு கருத்தை கலைத்துறையின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் படக்குழுவினரின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கையின் பிரபல கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான “அய்யோ சாமி” பாடல் புகழ் பொத்துவில் அஸ்மின், திரைப்படத்தின் கதாநாயகன் டாக்டர் ஏ. ஹரிஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார். வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் பாடல்களுக்கு குரல் வழங்கியுள்ளனர்.

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரித்துள்ள “நல்லபடம்” திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய சி. பிரபுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இலங்கையில் இசை வெளியீடு மற்றும் ஊடகப் பிரசாரங்கள் மூலம் கவனம் பெற்றுவரும் “நல்லபடம்”, எதிர்வரும் செப்டம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.

போதைக்கு எதிரான விழிப்புணர்வை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு செல்லும் இந்த முயற்சி, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

Source: https://samugammedia.com/the-music-of-the-movie-nallapadam-is-released-on-a-double-disc-1787573118

NO COMMENTS

Exit mobile version