Home இலங்கை நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனை – 86 சட்டமீறல்கள் கண்டுபிடிப்பு

நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனை – 86 சட்டமீறல்கள் கண்டுபிடிப்பு

0
image

நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 362 மருந்தகங்களில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அண்மைய சோதனைகளையும் இணைத்துக் கொண்டதன் பின்னர், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விசேட மருந்தக சோதனைகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் 2,269,500 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலாவதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் விற்பனை செய்தல், கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துகள், நுகர்வோர் தகவல் விதிமுறைகளை மீறுதல், அத்துடன் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பல்வேறு குற்றங்கள் சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், ஊசி குழாய்கள் (Syringes), கிரீம்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள், கர்ப்பப் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/special-inspections-in-471-pharmacies-across-the-country–86-legal-violations-found-1785989169

NO COMMENTS

Exit mobile version