ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (30) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (30) நண்பகல் 12.11 மணிக்கு மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: https://samugammedia.com/weather-changes-in-many-parts-of-the-country-1788055275
