நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜமீல் விஜேசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவரின் தகவலின்படி, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான டெங்கு தொற்று நிலைக்கு ஒப்பான அளவில் தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 8,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலேயே 9,000 க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் வாராந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பதிவாகும் மொத்த நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இன்னும் உச்ச நிலையை எட்டாத போதிலும், சுகாதார அமைப்பு ஏற்கனவே தனது அதிகபட்ச சேவை திறனை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதனால் பணியாளர் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து இலக்கு அடிப்படையிலான தேசிய செயல் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
