ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அவசரமாகச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (4) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் சுமார் ஐந்து மணிநேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, நாமல் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அறையில் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அவசரமாகச் சென்றதாகக் கூறப்படும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அர்ச்சுனா எம்.பி. எதற்காக நீதிமன்றத்திற்கு சென்றார் என்பது தொடர்பில் காணொளியில் தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது வருகை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது முகநூல் பக்கத்தில் அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
குறித்த பதிவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்முடன் தொடர்புடைய ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், நாளை மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்துள்ளனர் என்பது தொடர்பில் பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற சம்பவத்தை புறக்கணிப்பது கடினம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள தமது மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை. மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தப் பதிவில், தாம் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும் எனவும், ஆனால் தமது குரலையோ, நம்பிக்கைகளையோ அல்லது நாட்டின் மக்களுக்காக தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அதிகாரம் தற்காலிகமானது என்றும், உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், தற்போதைய சம்பவங்கள் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/arjuna-mp-ran-in-anxious-for-us—heavy-security-inside-the-prison-1788584711
