நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தேர்வெழுதவுள்ளனர்.
பரீட்சைக்கான விசேட வகுப்புகள் நடத்துவது கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளது.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக பரீட்சை தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கான தடை தொடர்கின்றது.
பரீட்சை மைய வளாகத்தினுள் பெற்றோர்கள் நுழைவதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கடிகாரங்கள், கைபேசிகள், குறிப்பேடுகள் அல்லது எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது.
மாணவர்கள் எவ்வித பதற்றமும் இன்றி மன அமைதியுடன் பரீட்சைக்கு முகங்கொடுக்க ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே பரீட்சை மையத்தை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பகுதி II (Paper II): காலை 09:30 – காலை 10:45
சிறு இடைவேளை
பகுதி I (Paper I): காலை 11:15 – நண்பகல் 12:15
வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசித்து, தமது சுட்டெண்ணைத்Number) துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். விடைகளை வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் நேரடியாக எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை நேரத்தில் ஏதேனும் அசாதாரண அல்லது இயற்கை அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் பின்வரும் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: 0113 – 66 81 19, 0113 – 66 80 26, 0113 – 66 80 32, 0113 – 66 80 87
