கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் என எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(05) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் கொள்கை பிரகடன வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும்
அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும் தன்னம்பிக்கையோடும், சுயமாகவும் எழுந்து நின்று கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் கொள்கை திட்ட தயாரிப்பின் போது முன்னோடிகளாக இளைஞர்களை நியமித்து, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் பொறுப்புக்களை ஏற்கக் கூடிய தலைவர்களாக
மாறுவதற்கான சூழ்நிலைக்குள் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
நாம் ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம்.
ஒவ்வொரு இளைஞரிடமும்
காணப்படுகின்ற ஆளுமை, திறமை, பண்பு, முயற்சி, என்பனவற்றின் ஊடாக தொழில்
முனைவராக சமூகத்திலே செயல்பட முடியும் என்றால் அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க
செலவுக்கு ஏற்ப மூலதனத்தையும் வழங்குவோம்.
அத்தோடு ஒரு மில்லியன் தொழில்
முனைவோர்களை உருவாக்குகின்ற போது அவர்கள் பொருளாதார வளர்ச்சியின்
முன்னேற்றத்திலும் பொருளாதார அபிவிருத்தியிலும் பங்காளர்களாக மாறுவதோடு, தலைவர்களாகவும் மாறுவார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.