Home இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்? – அரசாங்கத்தை சாடும் சந்திம வீரக்கொடி

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்? – அரசாங்கத்தை சாடும் சந்திம வீரக்கொடி

0
image

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொண்டது.

எனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு, மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை.

இவ்வாறான திருத்தங்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அல்லது சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில், நீதிபதிகளை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் ஏன் செயற்பட வேண்டும்?

 முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும், அரசியலமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்திற்குப் பொருந்தும் வகையில் அமல்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அரசியலமைப்பின் படி ஓய்வுபெறும் வயது 65 என இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது.

வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன. 

எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.

இந்த தீர்மானத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 

பொதுமக்கள், நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.

எனவே, அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசியலமைப்பு விதிகளை மதித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் சந்திம வீரக்கொடி வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/intimidation-of-judicial-independence–chandima-weerakody-criticizes-the-government-1785404136

NO COMMENTS

Exit mobile version