Home இலங்கை நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு; களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் – இன்று அவசர கூட்டம்!

நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு; களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் – இன்று அவசர கூட்டம்!

0
image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

இதன்படி, இன்று காலை 11 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இவ்விவகாரம் எந்தவொரு தனிநபரையோ அல்லது நீதிபதியையோ சார்ந்தது அல்ல என்றும், மாறாக இது நீதித்துறையின் சுதந்திரம், அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ராஜீவ் அமரசூரிய குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அடிப்படை மாற்றமும், பரந்த அளவிலான பொதுமக்களின் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைகளை உள்ளடக்கிய வெளிப்படையான செயல்முறையின் மூலமே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகக் கருதப்படும் இது குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் சிறப்புக் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

Source: https://samugammedia.com/raising-the-retirement-age-of-judges-sri-lanka-lawyers-association-steps-in—emergency-meeting-today-1785297164

NO COMMENTS

Exit mobile version