Home இலங்கை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முன்மொழிவு: நீதிமன்றம் செல்ல கூட்டு எதிர்க்கட்சி முடிவு

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முன்மொழிவு: நீதிமன்றம் செல்ல கூட்டு எதிர்க்கட்சி முடிவு

0
image

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் ஆண்ட்ரூ பேட்ரிக்கும் இடையில் இன்று (12) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின்போது, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு குறித்து பிரிட்டிஷ் உயர் ஆணையருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதன் மூலம் தேங்கியுள்ள வழக்குகளுக்கோ அல்லது நீதித்துறை நிர்வாகத்தில் காணப்படும் தாமதங்களுக்கோ தீர்வு காண முடியாது என்பதை உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மொத்த வழக்குகளில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு தொடர்பிலும் கருத்து தெரிவித்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பின்னர் நடைபெறும் சந்திப்பில் தற்போது எந்தவித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னரே சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Source: https://samugammedia.com/proposal-to-extend-the-retirement-age-of-judges-joint-opposition-decides-to-go-to-court-1786517934

NO COMMENTS

Exit mobile version