நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.
அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இருவேறான வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய (8) நிலவரப்படி 28 ஆக அதிகரித்திருந்தது.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் நேற்று (08) இரவு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படவிளக்கம்
குறிப்பிட்ட கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் அடங்கிய குழுவொன்றும் அவர்களிடையே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு சிறையில் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில், அங்குள்ள பெண் கைதிகள் குழுவொன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது.
எனினும், போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், கைதிகள் படிப்படியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து ஆண் கைதிகளை ஏனைய சிறைகளுக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்தந்தச் சிறைகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னரே இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் இன்னும் சுமார் 1,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறையிலிருந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறை மற்றும் பூசா சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்ட இரு கைதிகள், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
அதேநேரம், வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
