Home இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: திரண்ட கைதிகளின் உறவினர்கள்! விசாரணைக்கு விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: திரண்ட கைதிகளின் உறவினர்கள்! விசாரணைக்கு விசேட குழு நியமனம்

0
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) மதியம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மோதலில் ஈடுபட்ட தரப்புக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே தெரிவித்துள்ளார்.

ஆரம்ப விசாரணைகளின்படி, “பூரு மூனா” பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் செல்வாக்கின் கீழ் இந்த மோதல் நடைபெற்றதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோதல் தீவிரமடைந்த நிலையில், சில கைதிகள் விசேட வார்டுகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மற்றொரு குழுவினர் சிறைச்சாலையின் மருந்தகத்தை உடைத்து வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கைதிகளின் உறவினர்கள் பலர் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டு தங்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொலிஸார் தலையிட்டு காயமடைந்த கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்கியதுடன், சிலரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஏ.சி. கஜநாயக்க, தற்போது சிறைச்சாலையின் உள்நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளுக்கு இந்த மோதலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், கைதிகளின் உறவினர்கள் தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், கைதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளதாகவும், சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக்காக விசேட குழு தனது பணியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/watercress-prison-clash-relatives-of-the-gathered-prisoners-special-committee-appointed-for-investigation-1783312279

NO COMMENTS

Exit mobile version