நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (14) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக் குழுவும், அதனுடன் 7 தனித்துவமான விசேட விசாரணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்டவர்களால் சிறைச்சாலையின் சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் DVR பதிவுக் கருவிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தொழில்நுட்பப் பிரிவில் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் சில கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் மற்றும் உள்ளக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.
