Home இலங்கை நோர்ட்டனில் 24 மணிநேரத்தில் 258.6 மி.மீ. மழை பதிவு; மண்சரிவு அபாயம் தீவிரம்

நோர்ட்டனில் 24 மணிநேரத்தில் 258.6 மி.மீ. மழை பதிவு; மண்சரிவு அபாயம் தீவிரம்

0
image

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தின் நோர்ட்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (03) காலை 8.30 மணி முதல் இன்று (04) காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நோர்ட்டனில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனுடன், கெனியன் பகுதியில் 234.6 மில்லிமீற்றர், லக்ஷபானவில் 208 மில்லிமீற்றர், காசல்ரீயில் 164 மில்லிமீற்றர், மாவுஸ்ஸாக்கலையில் 125 மில்லிமீற்றர், மேல் கொத்மலையில் 110.3 மில்லிமீற்றர் மற்றும் கொத்மலையில் 105 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் அளவிலான அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதில், நேற்று (03) ஒரே நாளில் மட்டும் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினத்தின் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக அது பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் 150 மில்லிமீற்றர் முதல் 500 மில்லிமீற்றர் வரையிலான அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகுவது தற்போது வழக்கமான நிலையாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்ட கலாநிதி வசந்த சேனாதீர, தற்போதைய நிலைமையை கடந்த காலத்தில் ஏற்பட்ட ‘திட்வா’ சூறாவளி காலநிலையுடன் ஒப்பிட முடியாது என்றும், அக்காலத்தில் இதைவிட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/northern-got-2586-mm-of-rain-in-24-hours-risk-of-landslides-is-severe-1785829100

NO COMMENTS

Exit mobile version