முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து வரும் நபர்களை இலங்கைக்குக் கொண்டு வருவதில் அரசாங்கத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் பாதாள உலகக் குழுவினரை இராஜதந்திர மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்குக் கொண்டு வர முடிந்தால், நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களையும் நாட்டுக்குக் கொண்டு வருவது சாத்தியமானதே எனக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் முழுமையாக நீதித்துறை சார்ந்த செயல்முறையாகும் என்றும், அரசாங்கத்தின் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சுயாதீனத்தையும் உறுதிப்படுத்துவதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வார்கள். அதன் பின்னரே பிணை வழங்கப்படுமா அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படுமா என்பது தொடர்பான தீர்மானங்களை நீதிமன்றமே சுயாதீனமாக எடுக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளனவா என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் தற்போதைக்கு தம்மிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் சர்வதேச பொலிஸ் அமைப்புகளும் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில், பொதுமக்கள் தற்போது எதிர்பார்க்காத பல முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், இந்த சட்ட நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி விரைவாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
