நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் தென்னே ஞானானந்த,
தற்போதைய வைத்தியசாலை கட்டமைப்பில் சுமார் 23,000 தாதியர் வெற்றிடங்களும், 14,000 கனிஷ்ட ஊழியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமையால், ஒரு தாதியர் இரண்டு பேரின் பணிச்சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து பல நாட்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் தாங்க முடியாத வேலைப் பளு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னணியில் தாதியர் பற்றாக்குறையும் அதிகரித்த பணிச்சுமையும் முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறை தொடர்பாக நீண்ட காலமாக எச்சரிக்கை விடுத்து வருவதாகக் கூறிய அவர், குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
எனினும், அரசாங்கம் இதுவரை போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள மன அழுத்தம் காரணமாக தாதியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நிலையும் வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனால் சுகாதாரக் கட்டமைப்பு மேலும் பாதிக்கப்படுவதற்கு முன்னர், தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடி மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
